ராகம் : ஹம்ஸாநந்தி
16. கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
கிளி போன்ற திருமேனி உடைய தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிகளுக்கு ஆதார பொருளே! எண்ணிப் பார்க்கும் போது தத்துவங்களை கடந்த பரவெளியாகவும், அவ்வெளியிலிருந்து ஆகாசம் முதலிய ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! பரம் பொருளாகிய நீ எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றது வியக்கத் தக்கது.
17. அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
அபிராமி அன்னை அதிசயமான அழகு திருவுருவத்தை உடையவள்! அவள் தாமரை மலர்களை அழகில் வென்றதால் அவைகளால் துதிக்கக் கூடிய சுந்தர முகத்தை உடைய கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாகுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாளல்லவா, வெற்றியுடைய தேவி? துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் -– அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர்.
தம் மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே –- அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் குழையச் செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.
18. வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே.
அபிராமித் தாயே! எந்தை சிவபிரானோடு இரண்டறக் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் அர்த்த நாரீஸ்வரர் திருக்கோலமும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், என் உள்ளத்துள்ளே இருந்த ஆணவத்தை போக்கி, என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி என்னை ஆட்கொண்ட நின் பொற்பாதங்களோடு கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
19. வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
நின் அற்புத திருமணக் காட்சி கண்டு என் கண்களும் நெஞ்சும் கொண்ட இன்ப வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. அடியேனது உள்ளத்துள்ளே தெளிந்த மெய் ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது எப்பேர்ப்பட்ட திருவருளோ? ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே!
20. உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே.
நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் பதியாகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனோ அல்லது வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருக்கக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
அபிராமி அந்தாதி பாடல்களை இங்கே கற்கவும்.